குஜராத், இமாசல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை தக்க வைக்குமா, பா.ஜனதா?


குஜராத், இமாசல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை தக்க வைக்குமா, பா.ஜனதா?
x

சட்டசபை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாசல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஆமதாபாத்,

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த சில வாரங்களாக தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது. மாநிலத்தின் 182 உறுப்பினர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

8 மணிக்கு தொடங்கும்

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இதனால் தேர்தல் முடிவுகள் நண்பகல் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி பிரசாரம்

மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா, இந்த முறையும் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியை தொடர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்காக பிரதமர் மோடி தலைமையில், மத்திய மந்திரிகள், பா.ஜனதா முதல்-மந்திரிகள் என கட்சியின் மூத்த தலைவர்கள் மாநிலத்தில் சூறாவளி பிரசாரங்கள் மேற்கொண்டனர்.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியும், குஜராத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியை வேகப்படுத்தியது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் என கட்சியின் மூத்த தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

குஜராத்தில் இந்த முறை புதிய வரவாக மாறியிருக்கும் ஆம் ஆத்மியும் மாநிலத்தில் தேர்தல் களத்தை பரபரப்பாக்கி இருந்தது.

பா.ஜனதாவினர் மகிழ்ச்சி

இந்த கட்சிகள் உள்பட சுமார் 70 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 624 சுயேச்சைகள் என 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

மாநிலத்தில் ஆட்சியமைக்க 92 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது. இந்த மகிழ்ச்சி நிலைபெறுமா? என்பது இன்று தெரியவரும்.

இமாசல பிரதேசம்

முன்னதாக, 68 இடங்களைக்கொண்ட இமாசல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் முடிந்து சுமார் 1 மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் வாக்குகள் அனைத்தும் இந்த மையங்களில் எண்ணப்படுகின்றன.

இமாசல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன.

கனவு பலிக்குமா?

மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எனினும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பா.ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதேநேரம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவோம் என காங்கிரசும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

இதில் யாருடைய கனவு பலிக்கும்? என்பது இன்று தெரிந்து விடும்.

இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story