முஷரப்புக்கு புகழாரம் சூட்டிய காங்கிரசுக்கு பா.ஜனதா கண்டனம்
மறைந்த முஷரப்புக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் புகழாரம் சூட்டினார்.
புதுடெல்லி,
மறைந்த முஷரப்புக்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் புகழாரம் சூட்டினார். அதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கார்கில் தாக்குதலை கட்டமைத்தவரை சமாதானத்துக்காக பாடுபட்டவர் என்பதா? என்று கேட்டுள்ளது.
ஆண்டுதோறும் சந்தித்தேன்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியுமான சசிதரூர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
முஷரப் மறைந்து விட்டார். ஒருகாலத்தில் இந்தியாவின் அடக்க முடியாத எதிரியாக இருந்த அவர், 2002 முதல் 2007-ம் ஆண்டு வரை சமாதானத்துக்கான உண்மையான படையாக மாறினார்.
ஐ.நா.வில் இருந்த காலத்தில் அவரை ஆண்டுதோறும் சந்தித்துள்ளேன். தனது வியூக சிந்தனையில் அவர் மிடுக்காகவும், தெளிவாகவும் செயல்பட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சர்வாதிகாரி
இதற்கிடையே, சசிதரூர் புகழஞ்சலிக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முஷரப், கார்கில் தாக்குதலை கட்டமைத்தவர். சர்வாதிகாரி. கொடிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர். தலீபான்களையும், பின்லேடனையும் சகோதரர்கள் என்றும், மாவீரர்கள் என்றும் பாராட்டியவர். கார்கில் போரில் இறந்த தனது வீரர்களின் உடல்களை கூட பெற்றுக்கொள்ள மறுத்தவர். அவரை காங்கிரஸ் கட்சி புகழ்கிறது. மறுபடியும், பாகிஸ்தான் வழிபாட்டில் காங்கிரஸ் ஈடுபடுகிறது.
ராகுலுக்கு பாராட்டு
ஒரு தடவை, ராகுல்காந்தியை 'ஜென்டில்மேன்' என்று முஷரப் புகழ்ந்தார். தனது மனைவி, மகன், சகோதரர் ஆகியோரை மன்மோகன்சிங் விருந்துக்கு அழைத்ததாகவும் கூறினார். இதுதான், முஷரப்புடன் காங்கிரஸ் நெருங்க காரணமாகி விட்டது போலும். 370-வது பிரிவு நீக்கத்தை எதிர்த்தது, துல்லிய தாக்குதலை சந்தேகித்தது என பாகிஸ்தான் கருத்தை காங்கிரஸ் எதிரொலிக்கிறது. இதுதான் காங்கிரஸ். வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மெகபூபா முப்தி
இதற்கிடையே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியும் முஷரப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண உண்மையான முயற்சி மேற்கொண்ட ஒரே பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷரப்தான். காஷ்மீர் மக்கள் விருப்பத்துக்கு ஏற்ற தீர்வை காண அவர் விரும்பினார்.
அவரும், வாஜ்பாயும் ஏற்படுத்திய நல்லெண்ண நடவடிக்கைகளை இந்திய அரசு மாற்றியது. இருப்பினும், போர் நிறுத்தம் நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.