தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்


தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து பெங்களூருவில் நேற்று பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இதில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சரியான வாதத்தை எடுத்து வைப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாகவும், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு முழுமையாக தோல்வி அடைந்ததாகவும் பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் தோல்வியை கண்டித்து பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று காலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினார்கள். இதில், முன்னாள் முதல்-மந்திரிகள் சதானந்தகவுடா, பசவராஜ் பொம்மை, முன்னாள் மந்திரிகள் அஸ்வத் நாராயண், கோவிந்த கார்ஜோள், கோபாலய்யா, முன்னாள் சபாநாயகர் காகேரி மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், காலி குடத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் படத்தை வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு எதிராகவும் பா.ஜனதா தலைவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் அரசியல் காரணங்களுக்காக காவிரியில் தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்து விடுவதாக குற்றம்சாட்டினர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது, 'தமிழ்நாட்டின் ஏஜென்ட் போல் காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் முன்பாகவே தமிழ்நாட்டுக்கு காவிரியில் அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இது மிகப்பெரிய தவறு. காவிரி விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளிலும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து விட்டது.

காவிரி பிரச்சினைக்காக இன்று (அதாவது நேற்று) மைசூரு வங்கி முன்பாக பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட்டால் பா.ஜனதா போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். காங்கிரஸ் கட்சி இன்னும் அதிகாரத்தில் தொடருவதற்கு தகுதி இல்லை. காவிரி நதிநீர் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்' என்றார்.

இதுபோன்று, முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசுகையில், 'காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சரியான வாதத்தை எடுத்துவைப்பதில் தோல்வி அடைந்து விட்டது. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிட்டு, கர்நாடகத்தின் உரிமையை பலி கொடுத்து விட்டனர். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதற்காக மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சித்தராமையா கூறுகிறார். சோனியா காந்தி தலையிட்டாலும் கூட காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்' என்றார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர்கள் மைசூரு வங்கி சர்க்கிள் முன்பாக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சதானந்தகவுடா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரையும் வேனில் எற்றி போலீசார் அழைத்து சென்றார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தையொட்டி மைசூரு வங்கியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story