மராட்டிய அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது - மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு


மராட்டிய அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது - மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு
x

மராட்டிய அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் எதிர்ப்பு அணி உருவாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்த சர்ச்சையால் கடந்த 2 நாட்களாக மராட்டிய அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மராட்டியத்தில் ஒரு நிலையான அரசாங்கத்தை சீர்குலைத்து மாநிலத்தில் தங்கள் ஆட்சியை அமைப்பதற்கு பாஜக அர்சு முயற்சித்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலுக்காகவும் இதைச் செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் (காங், என்சிபி, சிவசேனா) மகா விகாஸ் கூட்டணியை வலுப்படுத்துவோம் என்று கூற விரும்புகிறேன்.

எங்களது கட்சி மகா விகாஸ் கூட்டணியுடன் எப்போதும் துணை நிற்கும், நாங்கள் ஒன்றாகச் செயல்பட விரும்புகிறோம். தற்போதைய மராட்டிய அரசு மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறது. ஆனால் மராட்டிய அரசை சீர்குலைக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. கடந்த காலத்தில் கர்நாடகம், மத்தியப் பிரதேசம், கோவாவிலும் இதைத்தான் செய்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story