பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று விமர்சித்த கார்கே பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் - தேர்தல் கமிஷனிடம் பாஜக மனு


பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று விமர்சித்த கார்கே பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் - தேர்தல் கமிஷனிடம் பாஜக மனு
x

பிரதமர் மோடியை ‘விஷப்பாம்பு’ என்று விமர்சித்த கார்கே பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் பாஜக மனு அளித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று விமர்சித்தார். அதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கக்கோரி, தேர்தல் கமிஷனிடம் பாஜக கோரிக்கை மனு அளித்தது. மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தலைமையிலான பாஜக குழு இம்மனுவை அளித்தது.

மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில், யார் மீதும் பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறாமல் இருப்பதை உறுதி செய்வது அரசியல் சட்டப்படி தேர்தல் கமிஷனின் பொறுப்பு. மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரசும் அடிக்கடி தவறு செய்யக்கூடியவர்கள்.

மதிப்புக்குரிய பிரதமரை அநாகரிக வார்த்தைகளால் விமர்சிப்பதை பார்த்தால், காங்கிரஸ் எந்த அளவுக்கு கீழே இறங்குகிறது என்பதை அறிய முடிகிறது. இதை தடுக்காவிட்டால், தேர்தல் கள சூழ்நிலை மேலும் மோசமாகி விடும். அத்துடன், காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் துணிச்சல் வந்து விடும். ஆகவே, கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், திட்டமிட்டு இழிவுபடுத்தியது மற்றும் மக்களை தூண்டி விட்டதற்காக, கார்கே மீது இந்திய தண்டனை சட்டத்தின் 499, 500 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின்கீழ், குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story