'சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறது பா.ஜ.க.' - டெல்லி மந்திரி விமர்சனம்


சி.பி.ஐ., அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க நினைக்கிறது பா.ஜ.க. - டெல்லி மந்திரி விமர்சனம்
x

தேர்தலுக்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக சம்மன் அனுப்பப்படுகிறது என டெல்லி கல்வித்துறை மந்திரி அதிஷி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த இதுவரை 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது என டெல்லி கல்வித்துறை மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியபோது, அதற்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக நாங்கள் குற்றம்சாட்டினோம். தற்போது பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா அதை நிரூபித்துள்ளார். அமலாக்கத்துறையினர் கெஜ்ரிவாலை கைது செய்வார்கள் என்று அவர் கூறுகிறார். அமலாக்கத்துறையினர் உறுதி செய்யாத விஷயம் குறித்து பா.ஜ.க.விற்கு எப்படி தெரியும்?

உண்மை என்னவென்றால், சம்மன் அனுப்புமாறு அமலாக்கத்துறைக்கு பா.ஜ.க. அறிவுறுத்துகிறது. இரண்டு வருடங்களாக விசாரணை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை என்பதால், தற்போது முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக சட்டவிரோதமாக சம்மன் அனுப்பப்படுகிறது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது. பா.ஜ.க.விற்கு தைரியம் இருந்தால், அவர்கள் செய்த சாதனைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும்."

இவ்வாறு டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.


Next Story