"என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது"- எடியூரப்பா பேட்டி


என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது- எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 15 March 2024 6:16 AM GMT (Updated: 15 March 2024 9:09 AM GMT)

என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் முதல் மந்திரி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைதானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பாலியல் குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

"சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என் வீட்டிற்கு வந்தார். சில பிரச்சனை எனக்கூறி அழுது கொண்டிருந்தாள். நான் என்ன விஷயம் என்று அப்பெண்ணிடம் கேட்டேன். இது தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனரை, அழைத்து அப்பெண்ணுக்கு உதவுமாறு கூறினேன். மேலும் அவர்களுக்கு நிதி உதவி செய்தேன்.

மக்களவை தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், தற்போது என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இது ஆதாரமற்றது. என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story