இந்தியாவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த வங்காளதேசத்தினர் - பரபரப்பு


இந்தியாவுக்குள் நுழைய எல்லையில் குவிந்த வங்காளதேசத்தினர் - பரபரப்பு
x

இந்தியாவுக்குள் நுழைய எல்லையில் வங்காளதேசத்தினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா,

வங்காளதேச விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கோர்ட்டு ரத்து செய்தது. ஆனாலும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது.

நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, வங்காளதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் கலைத்து உத்தரவிட்டார். அதேவேளை, அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் அதுவரை இடைக்கால அரசு பொறுப்பில் இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நேற்று பதவியேற்றது. அதேவேளை, வங்காளதேசத்தில் நடைபெற்ற போராட்டம், வன்முறையின்போது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிறுபான்மையினரின் மத வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோல், அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் பரவின. இதையடுத்து, வங்காளதேசத்தில் இருந்து வெளியேற பலரும் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் வங்காளதேசத்தினர் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நூற்றுக்கணக்கானோர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளன. மேற்குவங்காளத்தின் கூச் பீகார் மாவட்டம் சீதல்குச் பகுதியில் உள்ள இருநாட்டு எல்லையில் இன்று நூற்றுக்கணக்கான வங்காளதேசத்தினர் குவிந்தனர். அவர்கள் இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர்.

ஆனால், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் அந்நாட்டின் லால்மோனிர்ஹட் மாவட்டம் ஜெண்டுகுரி மற்றும் டொய்ஹ்வா கிராமங்களை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்து மதத்தினர் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்தியாவுக்குள் நுழைய வங்காளதேசத்தினர் முயற்சிப்பதால் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story