கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கிராம மக்களையும் கொன்று விடுவதாக மிரட்டிய வியாபாரி


கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கிராம மக்களையும் கொன்று விடுவதாக மிரட்டிய வியாபாரி
x

அரிவாளால் வெட்டி மனைவி, மாமனாரை கொலை செய்த நிலையில், பிடிக்க முயன்ற கிராம மக்களையும் கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கொன்று விடுவதாக வியாபாரி மிரட்டிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோலார்:

அரிவாளால் வெட்டி மனைவி, மாமனாரை கொலை செய்த நிலையில், பிடிக்க முயன்ற கிராம மக்களையும் கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கொன்று விடுவதாக வியாபாரி மிரட்டிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடும்ப தகராறு

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா நம்பிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா(வயது 60). இவரது மகள் ராதா(32). இவருக்கும், நாகேஷ் என்ற இறைச்சி வியாபாரிக்கும் கடந்த பல வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராதா, தனது கணவர் நாகேசிடம் கோபித்துக் கொண்டு நம்பிஹள்ளி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

மேலும் டெய்லரான ராதா, கிராமத்திலேயே ஒரு சிறிய பெட்டிக்கடை அமைத்து நடத்தி வந்தார். அங்கேயே டெய்லரிங் வேலையும் செய்து வந்தார். அவருக்கு அவருடைய தந்தை முனியப்பா உதவியாக இருந்து வந்தார்.

கொலை

இந்த நிலையில் நாகேஷ் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ராதா, தனது கணவர் நாகேசிடம் இருந்து கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றார். அப்போது நாகேஷ், மாதந்தோறும் ராதாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நாகேஷ், ராதா மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார். மேலும் அவர் அடிக்கடி ராதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகேஷ் நம்பிஹள்ளி கிராமத்திற்கு வந்து ராதாவை அரிவாளால் வெட்டி கொன்றார். அதாவது ராதாவை அவரது கடைக்கு சென்று சந்தித்த நாகேஷ் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் ராதாவை அவர் வெட்டி சாய்த்தார்.

மாமனார் சாவு

இதை தடுக்க வந்த ராதாவின் தந்தை முனியப்பா, ராதாவின் நாத்தனார்(அண்ணனின் மனைவி) அனுஷா(36), மருமகன் வருண்(16) மற்றும் மாமியார் ஆகியோரையும் நாகேஷ் அரிவாளால் வெட்டினார். இதுபற்றி அறிந்த சீனிவாசப்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று துப்பாக்கியால் நாகேசின் காலில் சுட்டு அவரை பிடித்தனர். பின்னர் அவரையும், அரிவாளால் வெட்டப்பட்ட முனியப்பா, அனுஷா, வருண் மற்றும் நாகேசின் மாமியார் ஆகியோரையும் மீட்டு சீனிவாசப்பூர் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நாகேசின் மாமனார் முனியப்பா இறந்துவிட்டார். அனுஷா, வருண் மற்றும் நாகேசின் மாமியாருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கியாஸ் சிலிண்டரை...

இதற்கிடையே நாகேஷ் பிடிபட்டது குறித்த தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதாவது நாகேஷ், ராதாவை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார். மேலும் தனது மாமனார் முனியப்பா உள்ளிட்ட 3 பேரையும் வெட்டி இருக்கிறார். இதைப்பார்த்த அப்பகுதி கிராம மக்கள் ஓடி வந்து நாகேசை பிடிக்க முயன்றனர். அப்போது அவர், கிராம மக்களை அரிவாளால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் அருகில் உள்ள ஒரு வீட்டிலேயே நடத்தப்பட்டு வரும் ஓட்டலுக்குள் நாகேஷ் ஓடி பதுங்கினார்.

அங்குள்ள சமையல் அறையில் பதுங்கிய நாகேஷ், தன்னை யாராவது பிடிக்க முயன்றால் கியாஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் நாகேஷ் பதுங்கிய ஓட்டலின் மீது கற்களை வீசி தாக்கினர்.

கல்வீசி தாக்கினர்

இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த சீனிவாசப்பூர் போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் நாகேசை பிடிக்க முயன்றனர். அப்போது கிராம மக்கள், நாகேசை கைது செய்ய வேண்டாம் என்றும், தாங்களே அடித்து கொன்று விடுவதாகவும் ஆக்ரோஷத்துடன் கூறினர். ஆனால் போலீசார் தொடர்ந்து நாகேசை பிடிக்க அந்த ஓட்டலுக்கு சென்றனர். அப்போது கிராம மக்கள் சிலர் அந்த வீட்டின் மீது கற்களை வீசினர். இதில் போலீசாரின் மீதும் கற்கள் விழுந்தது.

இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா மற்றும் 10 போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் கிராம மக்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர் கண்ணீர் புகை குண்டை போலீசார் வீசினர். மேலும் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டு நாகேசை சரண் அடைந்துவிடும்படி எச்சரித்தனர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் அந்த ஓட்டலுக்குள் இருந்து வெளியே ஓடி வந்த நாகேஷ் அங்கிருந்த 2 போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது போலீசார் அவரது காலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

பரபரப்பு

நாகேஷ் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்ததும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் சீனிவாசப்பூர் தாலுகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு பரபரப்பு நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story