இன்னும் 4 நாட்களில் 2-வது வேட்பாளர் பட்டியல்; டி.கே.சிவக்குமார் தகவல்
இன்னும் 4 நாட்களில் காங்கிரசின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு:
இன்னும் 4 நாட்களில் காங்கிரசின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அரசியல் முன்விரோதம்
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களுக்கு காசோலை மோசடி வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டு பல ஆண்டுகள் கழித்தும் இன்னும் 2 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.
அந்த எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படவில்லை. பழிவாங்கும் அரசியல், அரசியல் முன்விரோதம் காரணமாக ராகுல்காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
95 சதவீதம் பேருக்கு வாய்ப்பு
சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சியின் 124 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 95 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதி தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்க சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அனுமதி வழங்கி இருந்தது. வருணாவில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை அறிவித்துள்ளது. கோலார், பாதாமியில் அவருக்கு சீட் வழங்குவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.