பீகாரைபோல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு : முதல் - மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு


பீகாரைபோல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு : முதல் - மந்திரி அசோக் கெலாட் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2023 3:23 AM GMT (Updated: 7 Oct 2023 5:53 AM GMT)

பீகாரைபோல் ராஜஸ்தானிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று முதல் - மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார்.

ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இந்நிலையில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளை கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. இதில் பிற்படுத்தப்பட்டோர் மட்டும் 63 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் நேற்று அறிவித்துள்ளார்.

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த மாநிலக்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை அறிவித்தார். அதில் அவர் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் ராய்பூர் அமர்வில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் முறை பற்றி கூறினார். அதன் அடிப்படையில் நாங்கள் ராஜஸ்தானில் கணக்கெடுப்பை மேற்கொள்வோம் என்றார். மேலும் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம், எனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும், என்று அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் சாதிவாரியாக நிலைமை என்னவென்று தெரியும், ஏனெனில் நாட்டில் பல்வேறு வேலைகளை செய்யும் பல்வேறு சாதியினர் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Next Story