தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது


தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி காவிரியில் வினாடிக்கு 5,713 கன அடி நீர் தமிழகம் செல்கிறது.

மைசூரு:

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி காவிரியில் வினாடிக்கு 5,713 கன அடி நீர் தமிழகம் செல்கிறது.

கர்நாடக அணைகள்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் சரியாக பெய்யவில்லை. இதனால் கா்நாடகத்தில் உள்ள அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து இல்லை. இதையடுத்து ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. அப்போது ஒரு சில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி மற்றும் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ் (கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் இந்த 2 அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவு நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இந்தநிலையில் இந்த மாதம் தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனது. இதனால் இந்த அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 52 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வழங்கவேண்டும் என்று முறையிட்டனர். இதையடுத்து மாநில அரசு 2 அணைகளில் இருந்தும் தொடர்ந்து 6 நாட்கள் வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

தண்ணீர் திறப்பு குறைப்பு

இதற்கிடையில் அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால், தமிழகத்திற்கு திறந்துவிடும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கபினி அணைக்கு நேற்று வினாடிக்கு 970 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கபினி அணையின் நீர்மட்டம் (மொத்த கொள்ளளவு கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி) 2,272 அடியாக இருந்தது. இதில் அணையில் இருந்து வினாடிக்கு 2,583 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதேபோல கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 3,516 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் நீர் மட்டம் 102.90 அடியாக குறைந்தது. அதே நேரம் அணையில் இருந்து வினாடிக்கு 3,130 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதன்படி 2 அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5,713கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று முன்தினம் 10 ஆயிரம் 777 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு மேலும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story