தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x

காவிரி நிர்வாக ஆணைய முடிவை மதித்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இந்த முறை போதிய மழை பெய்யவில்லை. அடுத்து வரும் சில நாட்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். எப்படி இருந்தாலும், நாங்கள் காவிரி நிர்வாக ஆணையத்தின் உத்தரவை மதிப்போம். மழை சரியாக பெய்யாத காலத்தில் இடர்ப்பாட்டு சூத்திரத்தை பின்பற்றும் நிலை உள்ளது. நாங்கள் அதையும் கவனிப்போம்.

எங்களிடம் போதுமான அளவுக்கு நீர் இல்லை. ஆனாலும் எங்களிடம் எவ்வளவு நீர் உள்ளதோ, அதை தமிழகத்திற்கு திறந்துவிட திட்டமிட்டுள்ளோம். குடிநீருக்கு தேவையான தண்ணீரை வைத்துக் கொண்டு மீதமுள்ள நீரை திறப்போம். காவிரி நிர்வாக ஆணையத்தின் முடிவை நாங்கள் மதிப்போம்.

நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். இதை கண்டு எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால் சிறிய விஷயத்தை முன்வைத்து சட்டசபை கூட்டத்தை பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் புறக்கணித்துள்ளன. பா.ஜனதா கட்சியால் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க முடியவில்லை.

நைஸ் ரோடு திட்டத்தை கொண்டு வந்ததே தேவேகவுடா தான். அவர்கள் தான் அந்த சாலையில் நடமாடுகிறார்கள். அதில் ஏதாவது முறைகேடு நடந்திருந்தால் அவர்களின் ஆட்சி காலத்தில் விசாரணை நடத்தி இருக்க வேண்டியது தானே. ஏன் விசாரணை நடத்தவில்லை. அப்போது விட்டுவிட்டு இப்போது விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நாங்கள் மக்கள் பணிகளை ஆற்றுகிறோம்.

மணிப்பூர் விவகாரம் அவமானகரமானது. அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மாநில ஆட்சியை மத்திய அரசு கலைக்க வேண்டும். நமது கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. பிரதமர் இதுபற்றி பேசியுள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story