சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை தேடும் பணி தீவிரம்


சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை தேடும் பணி தீவிரம்
x

சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 13 இடங்களில் ராட்சத கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 13 இடங்களில் ராட்சத கூண்டும் வைக்கப்பட்டுள்ளது.

3 பேரை கொன்ற சிறுத்தை

ைமசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஆடு, மாடுகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை, மனிதர்களை தாக்க தொடங்கி உள்ளது. கடந்த 2 மாதங்களில் டி.நரசிப்புரா தாலுகாவில் சிறுத்தை தாக்கி சிறுவன் உள்பட 3 பேரை தாக்கி கொன்றிருந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை தாக்கி உயிரிழந்த 3 பேரும் 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தான். இதனால் ஒரே சிறுத்தை அவர்களை அடித்து கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். மேலும் ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க சிறப்பு படையை நியமித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

13 இடங்களில்...

அதன்படி வனத்துறை சிறப்பு படையினர் டி.நரசிப்புரா தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, பந்திப்பூர், நாகரஒலே பகுதிகளில் இருந்து சுமார் 120 பேர் 10 குழுக்களாக பிரிந்து ஆட்கொல்லி சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் ஹொரலஹள்ளி, கன்னநாயக்கனஹள்ளி, எம்.கெப்பேஉண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என வனத்துறையினர் கருதுகிறார்கள். இதனால், அந்தப்பகுதிகளில் 13 இடங்களில் ராட்சத இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுகள் துமகூருவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் 16 இடங்களில் சிறுத்தையை கண்காணிக்க கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

வனத்துறை சிறப்பு படையினர் ஹொரலஹள்ளி கிராமத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் சிறுத்தையை அங்குலம், அங்குலமாக தேடி வருகிறார்கள்.

அதிகாரம் இல்லை

இந்த நிலையில், ஆட்கொல்லி சிறுத்தையை கண்டால் சுட்டு கொல்ல மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதாக தகவல் பரவியது. இதனை வனத்துறை அதிகாரி மாலதி பிரியா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறுத்தையை கண்டால் சுட்டு கொல்ல உத்தரவிடும் அதிகாரம் தலைமை வன அதிகாரிக்கு மட்டுமே உள்ளது. ஆனால் இதுவரை சிறுத்தையை சுட்டுக் கொல்ல தலைமை வன அதிகாரி உத்தரவிடவில்லை. சிறுத்தையை உயிருடன் பிடிக்க தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்றார்.


Next Story