ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்
ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நவீன சகுனி என்று விமர்சித்தார். இட ஒதுக்கீடு மூலம் சமூகங்களை உடைத்து மோதலை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது குறித்து பிரதமர் மோடியை ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சித்து இருந்தார். அதுகுறித்தும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது. தேர்தல் நேரத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் நோக்கத்தில் திருப்பதி கோவிலுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விஷயத்தில் பொய்யான தகவல்களை அவர் வெளியிட்டதாகவும், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.