பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும், இந்தியாவைத் துண்டு துண்டாக உடைக்கும் முயற்சி என பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த 6 -ம் தேதி வெளியானது. இந்தில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பவை அடங்கிய பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பா.ஜனதா கடுமையாக விமர்சித்து வருகிறது.
அந்த வகையில், பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும், இந்தியாவைத் துண்டு துண்டாக உடைக்கும் முயற்சி. சுதந்திரத்தின் போது முஸ்லிம் லீக்கில் இருந்த அதே சிந்தனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது. முஸ்லிம் லீக்கின் முத்திரையைத் தாங்கிய இந்த தேர்தல் அறிக்கையில் எஞ்சியிருப்பதை, இடதுசாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். காங்கிரஸ், முஸ்லிம் லீக்கின் கருத்துக்களை இந்தியாவில் திணிக்கவும், ஊழல்வாதிகளைக் காப்பாற்றவும் முயல்கிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் மோடியின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர், தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் விதிகளை மீறி ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து விரைவில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.