காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் "சீன பொருட்கள்" மாதிரி.. கேரண்டி கிடையாது: அமித்ஷா தாக்கு


காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சீன பொருட்கள் மாதிரி.. கேரண்டி கிடையாது: அமித்ஷா தாக்கு
x

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் செய்த ஊழலுக்கு அளவே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஐதாராபாத்,

தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியிருப்பதால் இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. அந்த வகையில், பாஜகவுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

நாராயண்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: "வரவிருக்கும் தேர்தல் எங்களுடைய வேட்பாளரை எம்எல்ஏ ஆக்குவதற்கான தேர்தல் மட்டுமல்ல. தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். 10 ஆண்டுகால ஆட்சியில் தெலங்கானாவில் முதல்வர் கேசிஆர் மற்றும் அவரது அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எல்லையே இல்லை.

வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதாகவும், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டி தருவதாகவும் கே.சி.ஆர் அரசு கூறியது. அது தற்போது நிறைவேற்றப்பட்டதா? பட்டயக் கல்லூரி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். அது நிறைவேற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சீன பொருட்கள் போன்றவர்கள்..எந்த வித கேரண்டியும் இல்லாதவர்கள்" என்றார்.


Next Story