'காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஜனநாயகத்தில் உடன்பாடு இல்லை' - மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால்


காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஜனநாயகத்தில் உடன்பாடு இல்லை - மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால்
x

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டில் ஒழுக்கம் ஏற்படும் என்றும் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

புவனேஸ்வர்,

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும்.

கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால் இது சாத்தியம் அல்ல என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். எனினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும்படி தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் உயர்மட்டக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் 'காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு ஜனநாயகத்தில் உடன்பாடு இல்லை' என மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

"காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு ஜனநாயகத்தில் உடன்பாடு இல்லை. அவர்கள் சாமானிய மக்களை மதிப்பது இல்லை. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டில் ஒழுக்கம் ஏற்படும். அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன."

இவ்வாறு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.


Next Story