காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் யுகாதிக்கு பிறகே வெளியாகும்
காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் யுகாதி பண்டிகைக்கு பிறகே வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் யுகாதி பண்டிகைக்கு பிறகே வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
வேட்பாளர்களின் பட்டியல்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. மூன்று கட்சிகளும் யாத்திரை பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் பிரிவு குழு கூட்டம் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
யாருக்கு வாய்ப்பு
இதில் சட்டசபை தேர்தலில் போட்டியிட கர்நாடக காங்கிரஸ் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும், அங்கு யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நேற்றே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த வேட்பாளர் பட்டியல் குறித்து மீண்டும் ஒரு முறை விவாதிக்கப்பட்டு வருகிற யுகாதி பண்டிகைக்கு பிறகு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.