காங்கிரஸ் என்றால் ஊழல்; ஊழல் என்றால் காங்கிரஸ் - அமித்ஷா கடும் தாக்கு
10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் மோடியை யாராலும் குற்றம் சொல்ல முடியாது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி ஊழியர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு ஒத்ததாக இருக்கிறது. காங்கிரஸ் என்றால் ஊழல், ஊழல் என்றால் காங்கிரஸ். 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தார்கள். 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியை யாராலும் குற்றம் சொல்ல முடியாது.
வரவிருக்கும் மக்களவை தேர்தலில், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற செய்து மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும். இதன்மூலம், மோடியின் தலைமையில் பாரதத்தை வல்லரசாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாற்ற வேண்டும்.
காங்கிரஸ் அரசு 2004 -2014 வரை மத்தியபிரதேசத்துக்கு ரூ.1,99,000 கோடி மட்டுமே வழங்கியது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் 7,74,000 கோடி ரூபாயை மாநிலத்திற்கு வழங்கியுள்ளார். வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த மத்தியபிரதேசத்தை மீண்டும் உயிர்ப்பித்து வளர்ந்த மாநிலமாக மாற்றியது பா.ஜ.க. அரசு. பொதுமக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் பா.ஜ.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.