புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடக்கலை ஜனநாயகத்தை கொன்றுவிட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு


புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடக்கலை ஜனநாயகத்தை கொன்றுவிட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடக்கலை ஜனநாயகத்தை கொன்று விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆளும் பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.

ஜெய்ராம் ரமேஷ்

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றம் கடந்த 19-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த புதிய நாடாளுமன்றத்தின் வடிவமைப்பை காங்கிரஸ் கட்சி கடுமையாக குறைகூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

'மோடி மல்டிபிளக்ஸ்'

மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடம் உண்மையில் பிரதமரின் நோக்கங்களை நன்றாகவே உணர்த்துகிறது. அதை 'மோடி மல்டிபிளக்ஸ்' அல்லது 'மோடி மேரியட்' என்றுதான் அழைக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு பிறகு, இரு அவைகளிலும் மற்றும் மாடங்களிலும் குழப்பங்கள் மற்றும் உரையாடல்களின் மரணத்தைதான் நான் பார்த்தேன். புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடக்கலை ஜனநாயகத்தை கொன்றுவிட்டது. அப்படியென்றால், அரசியலமைப்பை மாற்றி எழுதாமலே பிரதமர் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார்.

தொலைநோக்கிகள் தேவை

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள அரங்குகள் வசதியாகவோ அல்லது கச்சிதமாகவோ இல்லாததால் ஒருவருக்கொருவர் பார்க்க தொலைநோக்கிகள் தேவைப்படுகின்றன. பழைய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு குறிப்பிட்ட ஒளியைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் உரையாடல்களையும் எளிதாக்கியது. அறைகள், மத்திய மண்டபம் மற்றும் தாழ்வாரங்களுக்கு இடையே நடப்பது எளிதாக இருந்தது. அடுத்த ஆண்டு (2024) ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சிறந்த பயன்பாடு கிடைக்கும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டு இருந்தார்.

ஜே.பி.நட்டா பதிலடி

அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தளத்தில், 'காங்கிரஸ் கட்சியின் கீழ்த்தரமான நிலையில் கூட, இது ஒரு பரிதாபமான மனநிலை. இது 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை அவமதிக்கும் செயலேயன்றி வேறில்லை. எனினும் நாடாளுமன்றத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் இத்தகைய கருத்துகள் வெளியாவது இது முதல்முறை அல்ல' என குறிப்பிட்டு உள்ளார்.


Next Story