விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் இன்று காங்கிரஸ் போராட்டம்; ராகுல் பங்கேற்பு
விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. ராகுல் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் போராட்டம்
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக்கொள்வதிலும், தன் இருப்பைக் காட்டிக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறது.
அந்த வகையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி போராடியது. அதே பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் போராட்டம் நடத்துகிறது.
ராகுல் பங்கேற்பு
இந்த போராட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். மேலும் டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கைக் காட்டிக்கொள்ள இந்த போராட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், ராகுல் காந்தி 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இன்று நடத்துகிற இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் வெளிநாட்டில் இருப்பதால் இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) ஜம்முவில் தனது முதல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.