பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பணவீக்கம், வேலையின்மை குறித்து கேள்வி எழுப்புவோம்: காங்கிரஸ்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை காங்கிரஸ் எழுப்ப உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஆண்டின் முதல் உரை என்பதால், இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையில் இல்லை.
இந்நிலையில் பணவீக்கம், வேலையின்மை, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை போன்றவற்றை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எழுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ""நாங்கள் ஜனாதிபதியின் முதல் உரையில் பங்கேற்க விரும்பினோம், ஆனால் வானிலை காரணமாக தாமதமாக இங்கு வந்தோம், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த பட்ஜெட் அமர்வில், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சீனாவுடனான எல்லை தகராறு போன்ற பிரச்சனைகளை எழுப்புவோம்.
மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்காத விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்புகிறோம். ஆனால் மத்திய அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது. நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியை பாராட்டாவிட்டாலும், அவரை தூற்றுவதிலேயே குறியாக உள்ளது. இது யாருக்கும் நன்மை சென்று சேருவதை பாஜக விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. குறிப்பிட்ட சில முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்குவது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பும்" என்றும் கார்கே கூறினார்.