ஒடிசா அரசை 'ரிமோட்' மூலம் இயக்குகிறது தமிழ்நாடு - ஸ்மிரிதி இரானி விமர்சனம்


ஒடிசா அரசை ரிமோட் மூலம் இயக்குகிறது தமிழ்நாடு - ஸ்மிரிதி இரானி விமர்சனம்
x

கோப்புப்படம்

ஒடிசாவில் வளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக மோடி அரசு பெரும் நிதியை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

புவனேஸ்வரம்,

ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவை தொகுதிகள் மற்றும் 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் 3-ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது.

கடைசி மற்றும் 4-ம் கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1-ந் தேதி நடக்கவுள்ளது. இதில் 6 மக்களவை தொகுதிகள் மற்றும் 42 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குஜாங் நகரில் நடைபெற்ற பா.ஜனதா பிரசார கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.

பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "ஒடிசாவில் வளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக மோடி அரசு பெரும் நிதியை வழங்குகிறது. ஆனால் தமிழ் 'ரிமோட் கண்ட்ரோல்' கீழ் இயங்கும் பிஜூ ஜனதா தள அரசின் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். பிஜூ ஜனதா தள மாபியா மாநிலத்தின் சுரங்கங்களையும், தண்ணீரையும் சூறையாடுகிறது.

மோடி அரசாங்கம் 'ஜல் ஜீவன் பிகாஷ்' திட்டத்தின் கீழ் நிதி மற்றும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கியது. ஆனால் அந்த பணம் மற்றும் வீடு தேவைப்படும் மக்களை சென்றடையவில்லை.

நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள அரசு தனது 25 ஆண்டுகால ஆட்சியில் மஹாகலாபாதா, ராஜ்கனிலா மற்றும் பட்குராவில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த எதையும் செய்யவில்லை. மக்கள் உண்மையிலேயே வளர்ச்சியை விரும்பினால், பா.ஜனதாவுக்கு வாக்களித்து தமிழ் ரிமோட் கண்ட்ரோலை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

ஊழல் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் பிஜூ ஜனதா தள அரசாங்கத்தை அகற்றிவிட்டு, மாநில மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சியை அமைக்க பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள்" என்று ஸ்மிரிதி இரானி பேசினார்.


Next Story