கொரோனா குறித்து பீதி அடைய வேண்டாம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


கொரோனா குறித்து பீதி அடைய வேண்டாம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x

கொரோனா விவகாரத்தில் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளர்.

சீனாவில் மீண்டும் கொரோனா

சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அந்த நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து, இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடக அரசும் கொரோனா பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக குளிர்சாதன வசதிகளுடன் கூடிய உள்அரங்குகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கொரோனா பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.), பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி.) பஸ்களிலும், மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் மக்களும் கொரோனா பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள்

மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக நான் கூட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தேன். சில வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை (அதாவது இன்று) வருவாய்த்துறை மந்திரி அசோக் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனாவால் பெரிய அளவில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. எனவே பூஸ்டர் தடுப்பூசியை மக்களுக்கு போடுவது குறித்து மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் பெரிய அளவில் நடத்துவதற்கும் அரசு தீர்மானித்திருக்கிறது.

பரிசோதனை அதிகரிக்க உத்தரவு

காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க பரிசோதனையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பஸ், ரெயில், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக்கியமாகும். இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

குறிப்பாக கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கும் விதமாக மருந்து, மாத்திரைகள் கையிருப்பு வைத்து கொள்வது, ஆக்சிஜன் பிளாண்டுகளை பரிசோதனை செய்து, தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் சுகாதாரத்துறை மந்திரிக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்துவது அவசியமாகும். அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த விவகாரத்தில் மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை.

மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முககவசம் அணிவது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது, கொரோனா பரிசோதனை செய்து கொள்வதில் அலட்சியமாக இருக்க கூடாது. புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படும். குளிர்கால கூட்டத்தொடரின் போது 3 நாட்கள் வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சி, அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படும். வடகர்நாடக மாவட்டங்கள் குறித்து பேசுவதற்கு உரிய அவகாசம் வழங்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story