தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை; டெல்லி அரசின் உத்தரவில் தலையிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டம்
மக்களின் உடல்நிலை மிகவும் முக்கியம் என்றும் டெல்லி அரசின் முடிவில் தலையிட முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதன்படி டெல்லியில் எல்லா வகையான பட்டாசுகளை தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும், ஆன்லைன் டெலிவரி செய்வதற்கும் மற்றும் பட்டாசுகளை வெடிப்பதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு சார்பில் 'பட்டாசு கடை' வைக்க உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் இந்த முடிவை எதிர்த்து பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு முறையிட்டார். அப்போது, பசுமை பட்டாசுகளை வெடிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு மாறாக டெல்லி அரசு ஒட்டுமொத்த தடையை விதித்திருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "டெல்லி அரசு எடுத்துள்ள முடிவில் நாங்கள் தலையிட மாட்டோம். பட்டாசுக்கு தடை என்றால், அது முழுமையான தடைதான். மக்களின் உடல்நிலை மிகவும் முக்கியம். பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எங்கே தடை இல்லையோ அங்கே சென்று வெடிக்கலாம். தீபாவளிக்கு மட்டுமல்ல, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போதும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. வெற்றியைக் கொண்டாட வேறு பல வழிகள் உள்ளன" என்று தெரிவித்தனர்.