இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து: பிரதமர் மோடி
ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சி ஆபத்து என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கான்பூர்,
உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29ந்தேதி இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கி.மீ. நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஆரையா மற்றும் எட்டாவா ஆகிய 6 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா-லக்னோ விரைவு சாலையுடன் இணைகிறது.
உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலை பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புந்தேல்கண்ட் விரைவு சாலை தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகருக்கு விமானத்தில் இன்று வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் ஜலான் நகருக்கு பிரதமர் மோடி சென்றார்.
இதனை காண நிகழ்ச்சியில், திரளான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் இருந்தபடி பிரதமர் மோடி, ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் நான்கு வழி விரைவுசாலையை திறந்து வைத்து உள்ளார். இதன்பின்னர் திரண்டிருந்த கூட்டத்தினரின் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, 2 விசயங்கள் சரி செய்யப்பட்டு விட்டால், பின்னர் அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் அந்த மாநிலம் போராட முடியும் என நான் அறிவேன்.
சட்டம் மற்றும் ஒழுங்கு, இணைப்பு ஆகிய இரண்டையும் நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்பட்டு உள்ளது. அதேபோன்று, நகரங்களை இணைத்தலும் நடந்துள்ளது என கூறியுள்ளார்.
இந்த விரைவு சாலையானது, தொடர்ச்சியான இணைப்பு மற்றும் அதனால் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த பகுதியில் ஏற்பட உறுதி செய்யும். இந்த விரைவு சாலையால், இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி அபரிமித அளவில் இருக்கும். இதுவே மோடி மற்றும் யோகியின் அரசு. நாங்கள் நகரங்களுக்கு மட்டுமின்றி கிராமங்களுக்கும் வளர்ச்சியை எடுத்து செல்வோம் என்று கூறியுள்ளார்.
அவர் கூட்டத்தினரின் முன் கூறும்போது, ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது. நாட்டின் அரசியலில் இருந்து அவைநீக்கப்பட வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த கலாசாரம் மிக ஆபத்து நிறைந்தது. இந்த கலாசாரத்துடன் இணைந்திருப்பவர்கள், புதிய விரைவுசாலைகளை, புதிய விமான நிலையங்களை அல்லது பாதுகாப்பு பகுதிகளை உங்களுக்காக கட்டமைக்கவே மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் வீழ்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, மாநிலங்கள் மற்றும் மத்தியில் உள்ள இரட்டை இயந்திரம் கொண்ட அரசாங்கங்கள், இலவச பொருட்கள் வினியோகம் தவறு என குறிப்பிடவில்லை. ஆனால், மாநிலத்தின் வருங்கால மேம்பாட்டுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என கூற வருகிறோம் என்று பேசியுள்ளார்.