வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கோடி தேவை; அரசிடம், மின்வாரியம் அறிக்கை தாக்கல்
வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கோடி தேவை என்று அரசுக்கு, மின்வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கோடி தேவை என்று அரசுக்கு, மின்வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
200 யூனிட் மின்சாரம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதாவது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை, வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் இலவச மின்சாரம், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம், பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
தற்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பதால் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்படி மக்கள் கூறி வருவதுடன், மின்கட்டணம் செலுத்தாமலும் இருந்து வருகின்றனர். மேலும் அரசு பஸ்களில் செல்லும் பெண்கள் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்கவும் மறுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த 5 வாக்குறுதிகளும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மாதம் ரூ.2 ஆயிரம் கோடி
அதே நேரத்தில் 5 இலவச திட்டங்களுக்கும் ஆகும் செலவு குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரசிடம் அறிக்கை வழங்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின்சார துறைக்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த தகவல்களை அரசிடம் மின்வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். அதன்படி, வீடுகளுக்கு மாதம் தோறும் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க ரூ.2 ஆயிரம் கோடி தேவை என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அதாவது மாதம் ரூ.1,955 கோடி வீதம், ஒரு ஆண்டுக்கு ரூ.23 ஆயிரத்து 400 கோடி தேவைப்படும் என்று மின்வாரியம் வழங்கி உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெஸ்காம், செஸ்காம், எஸ்காம் என அனைத்து மின் வாரிய நிறுவனங்களிடம் ஒட்டு மொத்தமாக 1.70 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.20 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்க உள்ளது.
முன்கூட்டியே ஒதுக்கும்படியும்...
இதன்மூலம் மாதம் ரூ.1,955 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும். அந்த தொகையை முன்கூட்டியே மின்வாரிய நிறுவனங்களுக்கு ஒதுக்கும்படியும், அப்போது தான் மின் வாரியங்கள் தங்கள் பணியை எந்த சிரமமும் இன்றி மேற்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் மின் கட்டணம் கிராமப்புறங்களில் குறைவாகவும், நகர்ப்புறங்களில் மின்கட்டணம் சற்று அதிகமாகவும் இருக்கும். எனவே கிராமப்புறங்களுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரத்தால் அரசுக்கு வருவாய் குறையும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.