தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீ்ர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கிடையே டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கூறி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேட்டனர். இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 24 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி), கபினியில் 13 டி.எம்.சி., ஹாரங்கியில் 7 டி.எம்.சி., ஹேமாவதியில் 25 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

பிலிகுண்டுலு அளவீட்டு மையத்திற்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடகத்தின் உண்மை நிலையை அந்த கூட்டத்தில் எடுத்துக் கூறியுள்ளோம். இந்த உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துவோம். முதல்-மந்திரியுடன் பேச இருக்கிறேன். வருகிற 1-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நீர் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

எங்களுக்கு கர்நாடகத்தின் நலன் முக்கியம். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கிற்கு சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி நான் இன்னும் உத்தரவிடவில்லை. அணைகளின் சாவி மத்திய அரசிடம் தான் உள்ளது. காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

சுப்ரீம் கோர்ட்டில் திட்டு வாங்க நான் விரும்பவில்லை. முன்பு இத்தகைய நெருக்கடியான நேரத்தில் பா.ஜனதா ஆட்சியில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். உண்மை நிலை பா.ஜனதாவினருக்கும் தெரியும். ஆனால் தண்ணீர் திறக்கக்கூடாது என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரி கூறியுள்ளார். இதன் மூலம் எங்களை இக்கட்டான சூழ்நிலையில் சிக்க வைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story