எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க.வுக்கு அமலாக்கத்துறை உதவுகிறது- கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதிய கலால் கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க.வுக்கு அமலாக்கத்துறை உதவுவதாக டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டில் புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக 5 பேர் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் புதிய கலால் கொள்கை முறைகேடு வழக்கில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க.வுக்கு அமலாக்கத்துறை உதவுவதாக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகைகள் போலியானவை. பிரதமர் மோடி ஆட்சியில் அமலாக்கத்துறை சுமார் 5 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் எத்தனை பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது?. அமலாக்கத்துறையின் அனைத்து குற்றப்பத்திரிகைகளும் போலியானவை. அமலாக்கத்துறை என்பது அரசுகளை கவிழ்க்க மத்திய அரசு பயன்படுத்தும் ஒரு நிறுவனம் மட்டுமே. ஊழல்களை ஒழிப்பதற்காக அமலாக்கத்துறை வழக்குகளை பதிவு செய்யவில்லை, ஆனால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க.வுக்கு உதவுகிறது" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.