டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய இந்தியா கூட்டணி தலைவர்களை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய இந்தியா கூட்டணி தலைவர்களை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2024 8:03 AM GMT (Updated: 15 March 2024 9:43 AM GMT)

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சி.ஏ.ஏ. குறித்து பேசியதை கண்டித்து நேற்று இந்து, சீக்கிய அகதிகள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

இந்த நிலையில், சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இதனிடையே இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் சி.ஏ.ஏ. குறித்து பேசியதை கண்டித்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்து மற்றும் சீக்கிய அகதிகள் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிராக பலகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தி அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அகதிகளில் ஒருவரான பஞ்சு ராம் என்பவர் கூறுகையில், எங்களுக்கு குடியுரிமை வழங்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சி.ஏ.ஏ.வை அமல்படுத்தியுள்ளது. அதை மற்ற அரசியல் கட்சிகள் ஏன் எதிர்க்கின்றனர். இந்த சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்ப்பதற்காக நாங்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

மேலும், "அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்... ஏன் எங்கள் உரிமைகளைப் பறிக்கிறார்கள்? பிரதமர் மோடி எங்களுக்கு உரிமைகளை வழங்குகிறார், அதை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சி.ஏ.ஏ. குறித்து பேசியதை கண்டித்து நேற்று இந்து, சீக்கிய அகதிகள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story