டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் எதிர்ப்பு - விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு


டெல்லி சட்டசபையை கூட்ட கவர்னர் எதிர்ப்பு - விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

டெல்லி சட்டசபையின் ஒருநாள் கூட்டத்தை கூட்ட கவர்னர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விதிகளை பின்பற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும், கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இதற்காக, இன்று (திங்கட்கிழமை) டெல்லி சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தை கூட்ட டெல்லி மந்திரிசபை, கவர்னர் சக்சேனாவுக்கு சிபாரிசு செய்தது.

கவர்னர் அறிக்கை

இந்நிலையில், சட்டசபையை கூட்ட கவர்னர் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டெல்லி சட்டசபை 4-வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ந் தேதி, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த கூட்டத்தொடர் இன்னும் முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை.

கூட்டத்தொடரை முடித்து வைக்காமல், அடுத்த கூட்டத்தொடரை கூட்ட முடியாது. விதிமுறைகளை பின்பற்றாமல், டெல்லி மந்திரிசபை சிபாரிசு செய்துள்ளது. எனவே, சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டக்கூடாது.

முடித்துவைக்க வேண்டும்

மேலும், என்ன பொருள் குறித்து விவாதிக்க சட்டசபை கூட்டப்படுகிறது என்பதை சிபாரிசில் குறிப்பிட வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. அதை குறிப்பிட்டால்தான், எம்.எல்.ஏ.க்கள் தயார்நிலையில் வருவார்கள்.

டெல்லி மந்திரிசபையும், டெல்லி சட்டசபையும் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதை முதல்-மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். எனவே, முதலில் கடந்த கூட்டத்தொடரை முடித்து வைப்பதற்கான திட்டத்தை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்ற பிறகு, புதிய கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கவர்னர் கூறியுள்ளார்.


Next Story