டெல்லி: கோவில் விழாவில் பரிதாபம்.. மேடை சரிந்து விழுந்து பெண் பலி


டெல்லி: கோவில் விழாவில் பரிதாபம்.. மேடை சரிந்து விழுந்து பெண் பலி
x

எடையைத் தாங்க முடியாமல், நடுப்பகுதி உடைந்து, மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

டெல்லி,

டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவை காண, நள்ளிரவில் சுமார் 1,600 பேர் கோவிலில் திரண்டு இருந்தனர். பாடகர் பி பிராக்கை காண ஏராளமானோர் மேடை அருகே திரண்டனர். இரவு முழுவதும் பாடல்கள், நடனங்கள் மற்றும் வழிபாடுகளை உள்ளடக்கிய 'ஜாகரனா' அல்லது 'ஜாக்ரதா' என்று அழைக்கப்படும் ஒரு இந்து சடங்கு கோவிலில் நடந்தது.

நேற்று அதிகாலை அந்த மேடையில் ஏராளமானோர் நின்றதால், மேடை திடீரென்று சரிந்து, முன்னாள் அமர்ந்திருந்த மக்கள் மீது விழுந்தது. இதில் துக்ளகாபாத்தை சேர்ந்த டீனா (45) என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக எய்ம்ஸ் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

விபத்து குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் தியோ கூறுகையில், 'கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு முன் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பினும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போதுமான போலீசார் நிறுத்தப்பட்டனர். விழா அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் குடும்பத்தினருக்காக பிரதான மேடைக்கு அருகில் இரும்பு சட்டத்தால் தாங்கப்பட்ட உயரமான மர மேடை அமைக்கப்பட்டது. அதன் மீது ஏராளமானோர் அமர்ந்திருந்ததால், எடையைத் தாங்க முடியாமல், நடுப்பகுதி உடைந்து, மேடை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது' என்றார்.

இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என்றனர். கோவில் விழாவில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் பெண் பலியான சம்பவத்துக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story