"பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு" - உக்ரைன் போர் குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்


பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு - உக்ரைன் போர் குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
x

உக்ரைன் போரில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியா-ரஷியா உச்சிமாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்த உச்சிமாநாடு ரஷியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உக்ரைனுடனான போர் காரணமாக இந்தியா-ரஷியா உச்சிமாநாடு குறித்த அறிவிப்பை ரஷியா வெளியிடவில்லை. இந்த சூழலில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உக்ரைன் போர் குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேசியதாகவும், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என மோடி வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றது குறித்தும், இந்தியா-ரஷியா இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேசியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ரஷிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் தொடர்பான ரஷியாவின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story