டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணைத்தலைவர் மரணம்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணைத்தலைவர் மரணம் அடைந்தார்.
மல்லேசுவரம்:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணைத்தலைவரும், தொழில் அதிபருமான விக்ரம் கிர்லோஸ்கர்(வயது64) பெங்களூரு மல்லேசுவரத்தில் வசித்து வந்தார். அவர் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர்.
ஆனால் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். கடைசியாக கடந்த மாதம்(நவம்பர்) 25-ந் தேதி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது நிறுவனத்தின் புதிய வகை காரை அறிமுகம் செய்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர், கிா்லோஸ்கர் நிறுவனத்தின் 4-வது தலைமுறை நிர்வாகியாக பணியாற்றினார்.
பி.இ. மெக்கானிகல் என்ஜினீயரிங் படித்த அவர் இந்திய கார் உற்பத்தியில் முன்னணி இடத்தில் இருந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட தொழில் அதிபர்கள் இரங்கல் தொிவித்துள்ளனர்.