இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கான டீசல் மானியம் திட்டம் அமல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கான டீசல் மானியம் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் ஏக்கருக்கு ரூ.250 வீதம் 5 ஏக்கர் வரை மானியம் கிடைக்கும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பட்ஜெட் தாக்கல்
கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எடியூரப்பா மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பணியாற்றிய பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவுப்படி அவர் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக தனது முதல் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் விவசாய துறை, போலீஸ் துறை, ஆதிதிராவிடர் நலத்துறைகளுக்கு கணிசமான நிதியை ஒதுக்கினார். இதில் விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டமும் ஒன்று. அந்த திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அந்த திட்டம் அமலுக்கு வராமல் இருந்து வந்தது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
மேலும் விவசாயிகளும் டீசல் மானிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மந்திரிசபை விரிவாக்கம் உள்பட பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் விவசாயத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
1.26 லட்சம் டன்
கர்நாடகத்தில் தற்போது 1.26 லட்சம் டன் டி.ஏ.பி. உள்பட மொத்தத்தில் 7.64 லட்சம் டன் உரம் கையிருப்பு இருக்கிறது. விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்ய தட்டுப்பாடு இல்லை. செயற்கை முறையில் உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். போலி விதைகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு 114.54 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் விதைப்பு பணிகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரிசு நிலத்தில் விவசாயம் செய்ய ஏற்ற வகையில் தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விவசாய உபகரணங்கள் வழங்கும்போது, விவசாயிகள் உற்பத்தி குழுக்களுக்கு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இம்மாத இறுதிக்குள் அமல்
57 தாலுகாக்களில் 2.75 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் பாசன வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்கும் திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இதன் மூலம் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.250 வீதம் 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதன்மூலம் விவசாயிகளுக்கான டீசல் மானியம் திட்டம் இந்த மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு விவசாய சங்கத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.