டெல்லி பயணம் ரத்து பற்றி டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி
வயிற்று வலியால் அவதிப்படுவதால் டெல்லி செல்ல முடியவில்லை என டெல்லி பயணம் ரத்து குறித்து டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
வயிற்று வலியால் அவதிப்படுவதால் டெல்லி செல்ல முடியவில்லை என டெல்லி பயணம் ரத்து குறித்து டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கடும் போட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியில் தற்போது முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவுக்கும், மாநில தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவி பெறுவதில் கடும் போட்டி எழுந்துள்ளது.
இதனால் முதல்-மந்திரி யார் என்பதை தேர்வு செய்யும் அதிகாரம், கட்சி மேலிடத்திற்கு வழங்கி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தீர்மானித்துள்ளனர். இருப்பினும் டி.கே.சிவக்குமார் தனக்கு இந்த முறை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு
நேற்று காலை அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஒற்றுமை யாத்திரை மற்றும் மேகதாது திட்டத்தை வலியுறுத்தி பேரணியை சிறப்பாக நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ததால் தான் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை பிடித்துள்ளது, எனவே தனது உழைப்புக்கு ஏற்ப ஊதியத்தை கட்சி மேலிடம் வழங்க வேண்டும். எனக்கு 135 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எனது தலைமையின் கீழ் தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது என்று மறைமுகமாக காங்கிரஸ் மேலிடத்திற்கு தனது முதல்-மந்திரி பதவி மீதான ஆசையை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே நேற்று டி.கே.சிவக்குமாருக்கு 62-வது பிறந்தநாள் என்பதால் அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு சதாசிவ நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு திரண்டு வந்தனர். அவர்கள் டி.கே.சிவக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
சித்தராமையா டெல்லி பயணம்
இத்தகைய சூழ்நிலையில், டெல்லி வரும்படி காங்கிரஸ் மேலிடம் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்தது. இதனால் மதியம் 1 மணி அளவில் சித்தராமையா டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
ஆனால் டி.கே.சிவக்குமார் டெல்லி செல்லாமல் தாமதம் செய்து வந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
டி.கே.சிவக்குமார் செல்லவில்லை
அதற்கு பதில் அளித்த அவர், தன்னையும், சித்தராமையாவையும் கட்சி மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது. இன்றைக்கு (அதாவது நேற்று) எனது பிறந்தநாள் என்பதால் ஆதரவாளர்கள், கட்சியினர், நண்பர்கள் நிறைய பேர் வந்து வாழ்த்துகிறார்கள். குடும்பத்தோடு என் குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும். அங்கே போன பிறகுதான் டெல்லிக்குப் போக முடிவு செய்துள்ளேன். எத்தனை மணிக்கு டெல்லி செல்வேன் என்பது தெரியவில்லை. டெல்லி செல்ல விமானம் கிடைக்கிறதோ இல்லையோ, தனி விமானத்தில் கூட டெல்லி செல்வேன் என்றார்.
இதற்காக டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் இருந்து இரவு 7.30 மணி அளவில் டெல்லி செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் அவர் டெல்லி செல்லவில்லை.