ஒடிசா: 3வது நாளாக நடைபெற்று வந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


ஒடிசா:  3வது நாளாக நடைபெற்று வந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Jan 2024 9:05 PM GMT (Updated: 7 Jan 2024 6:42 AM GMT)

ஓட்டுநர்கள் போராட்டம் தீவிரமடைந்தால் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

புவனேஸ்வர்,

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷயா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.

இதில், சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வாகன போக்குவரத்து சங்கம் வலியுறுத்தி வந்தது.

இதனையடுத்து இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், ஓடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் ஒடிசாவில் வேலை நிறுத்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்தால் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து பயணிகள் பேருந்து சேவைகள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பால் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அரசுடன் நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து வணிக ஓட்டுனர்கள் சங்கம் நேற்று இரவு தங்களது வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது.

இதுதொடர்பாக மகாசங்கத் தலைவர் பிரசாந்த் மெண்டுலி கூறுகையில், "ஒடிசா அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

மேலும், ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும், இயல்பு நிலை திரும்பும் என்றும் மாநில போக்குவரத்து ஆணையர் அமிதாப் தாக்கூர் தெரிவித்துள்ளார்.


Next Story