ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை


ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை
x

ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

புதுடெல்லி,

கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டுவரை ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வே வேலைகளை அவருடைய குடும்பத்தினர் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கொடுத்ததாக புகார் எழுந்தது.

அதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

லாலுபிரசாத் யாதவின் மகள்கள் ராகினி யாதவ், சாந்தா யாதவ், ஹேமா யாதவ், ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது.

இந்நிலையில், ராகினி யாதவிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவர் அளித்த பதில்கள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டன.

இதே வழக்கில், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், லாலுவின் மற்றொரு மகள் மிசா பாரதி ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது.


Next Story