பெங்களூருவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடி செய்தது தொடர்பாக பெங்களூருவில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பெங்களூரு:
பெங்களூருவில் பகுதி நேர வேலை தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக சீனா நிறுவனங்களுக்கு சொந்தமான 12 அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூருவில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, அவர்களிடம் பகுதி நேர வேலை தருவதாக கூறி, ஒரு செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றனர். பின்னர், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை மற்றொரு முதலீட்டு செயலியில் அந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தெற்கு மண்டல போலீஸ் நிலையம் ஒன்றில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சீனா நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது, ரூ.5.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதில் தொடர்புடைய 92 பேரில் 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.