டெல்லி: நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு


டெல்லி: நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு
x

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் தலைமை அலுவலகம், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட பத்திரிக்கை நேஷனல் ஹெரால்டு. இந்த பத்திரிக்கையை 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது.

இதனிடையே, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது.

அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பி செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது.

இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக்கொண்டதாகவும் இதில் முறைகேடு இருப்பதாகவும் பாஜக சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் சோனியா காந்தி, ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் தலைமை அலுவலகத்தில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அசோசியேட்டடு ஜெனரல்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரியில் இயங்கி வரும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் தலைமை அலுவலகம் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனையால் நேஷனல் ஹெரால்டு வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.


Next Story