டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். கோவையில் இருந்து பிற்பகல் 3.20 மணியளவில் டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில், அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க இருக்கிறார். இந்தக் சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் பேசப்படும் எனத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை, வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.