போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் - தைவான் விவகாரத்தில் இந்தியா கருத்து


போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் - தைவான் விவகாரத்தில் இந்தியா கருத்து
x

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

தைவான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை தொடங்கியது.

கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் சீனா ராணுவம் அறிவித்திருந்த நிலையில், 8-ந்தேதியை தாண்டியும் தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்தது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தாம் பக்‌ஷி கூறுகையில், "தைவான்-சீனா விவகாரத்தில் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பல நாடுகளைப் போலவே, இந்தியாவும் கவலை கொண்டுள்ளது.

கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், போர் பதற்றத்தைத் தணிக்கவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளர்.

முன்னதாக சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story