சட்டப்படி செயல்பட்டால் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படாது; வீரப்பமொய்லி பேட்டி


சட்டப்படி செயல்பட்டால் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படாது; வீரப்பமொய்லி பேட்டி
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:45 PM GMT)

சட்டப்படி செயல்பட்டால் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படாது என்று வீரப்பமொய்லி கூறியுள்ளார்.

பெங்களூரு:

சட்டப்படி செயல்பட்டால் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படாது என்று வீரப்பமொய்லி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

சட்டமும், அரசியல் சாசனமும் புனித தன்மையை கொண்டது. இந்த சட்டத்தை தனிநபரோ அல்லது பஜ்ரங்தள, பி.எப்.ஐ. போன்ற அமைப்புகளோ மீற முடியாது. ஒருவேளை சட்டத்தை மீறினால் அவற்றை தடை செய்யும் முடிவை எங்கள் கட்சி எடுக்கும். வெறுப்பு குற்றங்களில் ஈடுபடுவோர், சட்டவிரோத, தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாங்கள் எங்களின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

அந்த நோக்கத்தில் தான் பி.எப்.ஐ., பஜ்ரங்தள அமைப்புகளின் பெயர்களை நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதற்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த அமைப்புகளுக்கு தடை விதித்து விடுவோம் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் அத்தகைய நடவடிக்கையை எடுக்க போகிறோம். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதித்தார்.

மோசமான நடவடிக்கைகள்

ஆனால் அதற்கு பிரதமராக இருந்த நேரு எதிர்ப்பு தெரிவித்தார். அதையடுத்து ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது. அந்த தடை நீக்கப்படுவதற்கு முன்பு, எந்த விதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த அமைப்பிடம் இருந்து கடிதம் பெறப்பட்டது. இவ்வாறு தான் அந்த நிலையை அப்போது காங்கிரஸ் கையாண்டது.

எதிர்காலத்தில் பஜ்ரங்தள விஷயத்தில் காங்கிரஸ் இதே நிலையில் தான் நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை பஜ்ரங்தள அமைப்பு எந்த விதமான குற்றங்களிலோ அல்லது சட்டவிரோத, தேச விரோத செயல்களிலோ ஈடுபடாவிட்டால் அந்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பார்ப்போம். அந்த அமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெற்றியை பாதிக்காது

இந்த விவகாரம் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசின் வெற்றியை பாதிக்காது. சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அந்த அமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.


Next Story