எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை திடீர் ஆலோசனை; சுயேச்சைகளை இழுக்க முடிவு


எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை திடீர் ஆலோசனை; சுயேச்சைகளை இழுக்க முடிவு
x
தினத்தந்தி 12 May 2023 6:45 PM GMT (Updated: 12 May 2023 6:46 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் வெளியானதால் எடியூரப்பாவை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென்று சந்தித்து பேசினார். சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களை இழுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் வெளியானதால் எடியூரப்பாவை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திடீரென்று சந்தித்து பேசினார். சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களை இழுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பா.ஜனதாவுக்கு பின்னடைவு

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 224 தொகுதிகளுக்கும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (சனிக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 10-ந் தேதி வெளியான கருத்து கணிப்புகளில் 2 அமைப்புகள் மட்டுமே பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மற்ற 9 அமைப்புகளும் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தது.

கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாகவும், பா.ஜனதாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, இன்று(சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால், அதைத்தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு காவேரி இல்லத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை திடீரென்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். அவருடன் மந்திரிகள் முருகேஷ் நிரானி, பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

எடியூரப்பாவுடன் ஆலோசனை

பா.ஜனதா நடத்திய கருத்து கணிப்புபடி பிரதமர் மோடி வந்து சென்ற பின்பு ஆதரவு அதிகரித்திருப்பதால், 105 முதல் 115 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக எடியூரப்பாவிடம் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வது என்பது குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். ஜனார்த்தன ரெட்டியின் கட்சி 2 முதல் 4 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 முதல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது குறித்தும் அவர்கள் பேசியதாக தெரிகிறது.

பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தால் எந்த பிரச்சினையும் இல்லை. பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், சுயேச்சையாக வெற்றி பெறுபவர்களையும், ஜனார்த்தன ரெட்டியை பா.ஜனதா பக்கம் இழுக்கவும் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடனான கூட்டணி குறித்தும் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.


Next Story