தேர்தல் பத்திரம் நன்கொடை: காங்கிரசை முந்திய திரிணாமுல் காங்கிரஸ்


தேர்தல் பத்திரம் நன்கொடை: காங்கிரசை முந்திய திரிணாமுல் காங்கிரஸ்
x
தினத்தந்தி 17 March 2024 11:16 PM GMT (Updated: 17 March 2024 11:31 PM GMT)

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி,

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த விவரங்களை கடந்த 12-ந்தேதி தேர்தல் கமிஷனிடம் பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது. இந்த விவரங்களை கடந்த 14-ந்தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. 'பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்களின் வெளிப்பாடு' என்ற பெயரில் வெளியிடப்பட்ட 2 பாகங்களாக அவை வெளியிடப்பட்டு இருந்தன. இதில் கடந்த 2019 ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி வரை நாட்டின் முக்கிய கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

இதன் தொடர்ச்சியாக தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதாவது தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 2018 முதல் கட்சிகள் பெற்ற தொகை விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் எந்ததெந்த நிறுவனங்கள், எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன என்ற தகவல்களும் இடம்பெற்று உள்ளன.

குறிப்பாக, சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி வழங்கிய இடைக்கால உத்தரவுப்படி தேர்தல் கமிஷனில் கட்சிகள் வழங்கிய நன்கொடையாளர்களின் தகவல்களும் இடம்பெற்று உள்ளன. இதன்படி மத்தியில் ஆளும் பா.ஜனதா ரூ.6,986.5 கோடி பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளது.

அடுத்ததாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடி பெற்று 2-வது இடத்தை பெற்றிருக்கிறது. அதேநேரம் தேசிய கட்சியான காங்கிரஸ் ரூ.1,334 கோடியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் காங்கிரசை விட அதிக நிதியை திரிணாமுல் காங்கிரஸ் பெற்று இருக்கிறது. இதைத்தவிர பாரதிய ராஷ்டிர சமிதி (ரூ.1,322 கோடி), பிஜூ ஜனதாதளம் (ரூ.944.5 கோடி), தி.மு.க. (ரூ.656.5 கோடி), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (ரூ.442.8 கோடி) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதைப்போல தெலுங்குதேசம் (181.35 கோடி), மதசார்பற்ற ஜனதாதளம் (89.75 கோடி), ஆம் ஆத்மி (ரூ.69 கோடி), சிவசேனா (ரூ.60.4 கோடி), ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ரூ.56 கோடி), சமாஜ்வாடி (ரூ.14,05 கோடி), அகாலிதளம் (ரூ.7.26 கோடி), அ.தி.மு.க. (ரூ.6.05 கோடி), தேசிய மாநாடு (ரூ.50 லட்சம்) போன்ற கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்று உள்ளன.

அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை என தேர்தல் கமிஷனிடம் கூறியுள்ளது. பகுஜன் சமாஜ், இந்திய தேசிய லோக்தளம், மஜ்லிஸ் கட்சிகள் எந்த ரசீதுகளையும் தேர்தல் கமிஷனிடம் வழங்கவில்லை.

அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியதில் (ரூ.1,368 கோடி) முதலிடத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் அதில் சுமார் 37 சதவீதத்தை அதாவது ரூ.509 கோடியை தி.மு.க.வுக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தவிர சன் டி.வி. ரூ.100 கோடி உள்பட ேமலும் பல நிறுவனங்களும் தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க.வுக்கு நிதி வழங்கி இருக்கின்றன.

தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் அடையாளத்தை தேர்தல் கமிஷனில் வழங்கியிருக்கும் கட்சிகளில் தி.மு.க. முக்கியமானது. இதைப்போல அ.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் பெரும்பகுதி, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணி வழங்கியதாக தேர்தல் கமிஷனில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் நன்கொடையாளர்களில் ஆதித்யா பிர்லா குழுமம், இன்போசிஸ், ஜே.எஸ்.டபிள்யூ., எம்பசி குழுமம் ஆகியவை முக்கியமானவை ஆகும். அதேநேரம் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த தகவல்களை தேர்தல் கமிஷனிடம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story