பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்


பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
x

மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2021-22ம் ஆண்டிற்கான டெல்லி அரசாங்கத்தின் மதுபானக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் மற்றும் பணமோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இந்த மதுபானக் கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது.

இதனிடையே மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2022 ஆகஸ்ட் 17-ந்தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து 2022 ஆகஸ்ட் 22-ந்தேதி, மதுபானக் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21-ந்தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவால், தற்போது சுப்ரீம் கோர்ட்டால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளி என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ள நிலையில், இன்று 8-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story