யானை தாக்கி பலியான 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்;மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே அறிவிப்பு
யானை தாக்கி பலியான ௨ பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.௧௫ லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா விருபாக்சபுரா அருகே மாந்தோப்புக்குள் நேற்று அதிகாலையில் புகுந்த ஒரு காட்டு யானை, காவலாளி வீரபத்ரப்பா(வயது 40) என்பவரை தாக்கி கொன்றது. இதுபோல், பந்திப்பூர் வனப்பகுதியில் மலையூரு அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ரவி(40) என்பவர் உயிர் இழந்திருந்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சென்னப்பட்டணா மற்றும் பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் 2 பேர் உயிர் இழந்திருப்பது வேதனை அளிக்கிறது. வனவிலங்குகள் தாக்குதல் நடத்தி, உயிர் இழப்போரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, யானைகள் தாக்கியதில் பலியான 2 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். எந்த நிவாரணத்தின் மூலமாகவும் உயிர் இழந்தவர்கள் மீண்டும் வந்து விட போவதில்லை.
அரசு வழங்கும் நிவாரணம், பலியானவர்களின் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். மாநிலத்தில் எந்தெந்த கிராமங்களில் புகுந்து யானைகள் தாக்குதல் நடத்துகின்றன என்பதை கண்டறிந்து, அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். இதற்காக வருகிற பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.