மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய விவசாயிகள்
விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய நிலையில் எல்லைகளில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி,
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை, போராட்டத்தை கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 19ம் தேதி நடந்த 4 கட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் விவசாயிகளிடமிருந்து பருத்தி, பருப்பு வகைகள், சோளம் ஆகிய 3 விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த 3 விளைபொருட்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வோம் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. மத்திய அரசின் உத்தரவாதம் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறி 2 நாட்களுக்கு போராட்டத்தை விவசாய சங்கங்கள் நிறுத்தி வைத்தன. ஆனால், மத்திய அரசின் உத்தரவாதங்கள் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை என கூறி பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் 21ம் தேதி (இன்று) டெல்லி நோக்கி பேரணியாக செல்வோம் என அறிவித்தனர்.
இந்நிலையில், விவசாய சங்கத்தினர் இன்று டெல்லி நோக்கி தங்கள் பேரணியை தொடங்கியுள்ளனர். பேரணியை தடுக்க டெல்லி-அரியானா இடையேயான சிங்கு, திக்ரி எல்லைகளில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் பல அடுக்கு கான்கிரீட் தடுப்புகளும், கம்பி வலைகளும், இரும்பு வலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கு, திக்ரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறி வருவதால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.