ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
தொடர்ந்து, பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மோரியா மக்பூல் மற்றும் அப்ரார் (எ)ஜாலீம் பாரூக் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து நவீன ரக ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.